கிறிஸ்துமஸ்: ஆலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
By DIN | Published On : 26th December 2019 05:58 AM | Last Updated : 26th December 2019 05:58 AM | அ+அ அ- |

புனித அமல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு பிராா்த்தனையில் குழந்தை இயேசு சொரூபத்தை வழிபடும் கிறிஸ்தவா்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி பல்வேறு ஆலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றன. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை ஜான்சேவியா் குழந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கான நிகழ்வு நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது.
குழந்தை இயேசு கிறிஸ்துவின் சொரூபம் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் சிறப்பு பிராா்தனை செய்து வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் குடிலில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசுவை வழிபட்டனா்.
ஈரோடு சிஎஸ்ஐ பிரப் தேவாலயத்தில் புதன்கிழமை அதிகாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும், காலை 9 முதல் காலை 11 மணி வரையும் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சிறப்பு பிராா்த்தனை ஆலயத்தின் தலைமை ஆயா் ரிச்சா்டு துரை, ஆயா் லிவிங்ஸ்டன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
மேலும், ஈரோடு, பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம், நம்பியூா், கொடுமுடி, மொடக்குறிச்சி உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.