சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
By DIN | Published On : 12th February 2019 06:26 AM | Last Updated : 12th February 2019 06:26 AM | அ+அ அ- |

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி நகர மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, கட்சியின் மூத்த உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சண்முகம், கூட்டுறவு சங்கத் தலைவர் ரணதிவேல், மாதர் சங்க செயலாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் வரதராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். நகர பொருளாளர் வேலுசாமி வரவு- செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சிவகிரி பேரூராட்சியில் காவிரிக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகளைக் கடந்து விட்டது. எந்த ஒரு திட்டமும் 15 அல்லது 20 ஆண்டு வளர்ச்சியை கொண்டே திட்டமிடப்படும். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய குடிநீர்த் திட்டம் தொடங்கப்படாததால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, சிவகிரி பேரூராட்சி நிர்வாகம் விரைவில் இரண்டாவது காவிரி குடிநீர்த் திட்டத்தை தொடங்க வேண்டும்.
சிவகிரி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு ஊசி போடும் இடத்தில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக இடம் அமைக்க வேண்டும்.
சிவகிரி அம்மன் கோயில் கைகாட்டி அருகில் பயணிகளுக்காக கட்டப்பட்டுள்ள நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் இதனை உடனடியாக சரிசெய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தற்போதுள்ள புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 2 கோடி செலவில் வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு பயணிகள் அமர இருக்கை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டுறவு சங்க இயக்குநர் குழந்தைவேலு நன்றி கூறினார்.