ஈரோட்டில் பண இரட்டிப்பு மோசடி: பெண் உள்பட 7 பேர் கைது

ஈரோட்டில் இரு மடங்கு பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார்

ஈரோட்டில் இரு மடங்கு பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்; அவர்களிடம் இருந்து போலி பணக்கட்டுகள், வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு, நாராயணவலசு நசியனூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மகன் பிரபாகரன் (28). இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக உள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். தொழில் ரீதியாகப் பழக்கம் ஏற்பட்ட பவானி மேற்குத் தெருவைச் சேர்ந்த பழனிசாமி (65), பிரபாகரனை அணுகி, தனக்குத் தெரிந்த பெங்களூருவைச் சேர்ந்த நபர்கள் பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்பதாகவும், நாம் கொடுக்கும் பணத்துக்கு பதிலாக 3 மடங்கு பணம்  கிடைக்கும் என்றும் கூறினார். 
இதையடுத்து தன்னை அந்த கும்பலிடம் அறிமுகம் செய்து வைக்கும்படி பழனிசாமியிடம் பிரபாகரன் கேட்டுள்ளார். இந்நிலையில் ஈரோடு வஉசி பூங்காவில் வைத்து பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட  சிலரை பிரபாகரனுக்கு திங்கள்கிழமை காலை பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். காரில் அமர்ந்திருந்த கும்பலிடம் பிரபாகரன் தான் கொண்டு வந்திருந்த ரூ.50 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது காரில் இருந்தவர்கள்  இரண்டு  500 ரூபாய் கட்டுகளைக் கொடுத்துள்ளனர். 
அதை வாங்கிய பிரபாகரன், பணத்தை எண்ணிப் பார்க்க முயன்றபோது இங்கு வைத்து எண்ண வேண்டாம், வீட்டுக்குச் சென்று எண்ணலாம் என்று கூறியுள்ளனர். இதனிடையே, காரில் இருந்த கும்பல், போலீஸ் வருவதாகக் கூறி தங்களது வாகனத்தில் அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்தக் கும்பல் கொடுத்த பணத்தை  பிரபாகரன் எண்ணிப்பார்த்தபோது, பணக்கட்டில் மேல் மற்றும்  அடிப் பகுதியில் மட்டும் அசல்  500 ரூபாய்  தாள்  இருந்ததும், மீதமுள்ள 98 தாள்களை வெள்ளைத்தாள்களாக மறைத்து வைத்திருந்ததும்  தெரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரபாகரன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை  புகார் அளித்தார். இந்நிலையில் ஈரோடு - சத்தி சாலையில் மாமரத்துப்பாளையம் என்ற இடத்தில்  போலீஸார் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ஒரு வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில்,  தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த நாகராஜ் (40), பவானி மேற்கு தெருவைச் சேர்ந்த பழனிசாமி(65), பவானி அம்மாபேட்டை மீனவர் வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் (38), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த  தங்கமணி (52), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (32), பெங்களூருவைச் சேர்ந்த ரகு என்கிற ராகவேந்திரா (37), பெங்களூரு - கெங்கேரி பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் மனைவி யசோதா (55) ஆகிய 7 பேர் ஈரோட்டில்  பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 
இதையடுத்து அனைவரையும்  கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 80  பணக் கட்டுகளில் இருந்த தொகை ரூ.80 ஆயிரம், பயன்படுத்திய வாகனம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதானவர்களில்  நாகராஜ், தங்கமணி ஆகிய இருவரும் ஏற்கெனவே தர்மபுரி, கோவை உள்ளிட்ட இடங்களில் பண இரட்டிப்பு மோசடி செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதைத் தொடர்ந்து அனைவரும் ஈரோடு குற்றவியல் நடுவர்-1ஆவது நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com