குடும்பமே உடல்நலக் குறைவால் சாவு: தனிமையில் தவிக்கும் இளம்பெண்

சத்தியமங்கலம் வனப் பகுதி காளிதிம்பம் வனக் கிராமத்தில் பெற்றோரை இழந்த இளம்பெண் தனது தம்பியுடன்

சத்தியமங்கலம் வனப் பகுதி காளிதிம்பம் வனக் கிராமத்தில் பெற்றோரை இழந்த இளம்பெண் தனது தம்பியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் தம்பியும் உயிரிழந்ததால் சோகமே வாழ்க்கை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த இளம்பெண்ணின் நிலையைக் கண்டு அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், காளிதிம்பத்தைச் சேர்ந்த சாமிநாதன், மாரம்மாள் தம்பதிக்கு சிவரஞ்சனி (18) என்ற மகளும் ஹரிபிரசாந்த் (14) என்ற மகனும் உள்ளனர். கூலித் தொழிலாளியான சாமிநாதனின் மனைவி மாரம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக 2 ஆண்டுக்களுக்கு முன் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து மகன், மகளுடன் அதே கிராமத்தில் சாமிநாதன் வாழ்ந்து வந்தார். சிவரஞ்சனி பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு சாமிநாதன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். 
இதனால் பெற்றோரை இழந்து தவித்த சிவரஞ்சனியும்,  ஹரிபிரசாந்த்தும் அத்தையின் பாதுகாப்பில் இருந்து வந்தனர். தம்பிக்கு ஆதரவாக மேல்படிப்பைக் கைவிட்டு கூலிவேலைக்குச் சென்று வந்தார் சிவரஞ்சனி. இந்நிலையில் பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் சிவரஞ்சனிக்கு உதவ வேண்டும் என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இவருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.  இதற்கிடையே சிவரஞ்சனி குடும்பம் குறித்த செய்தியைப் பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இருவருக்கும் அரசு உதவி செய்யும் என அறிவித்தார். அவரது கல்லூரி படிப்புக்கும் உதவ முன்வந்தார். 
இந்நிலையில் தலமலையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வந்த ஹரிபிரசாந்த், காய்ச்சல் காரணமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.  பெற்றோரை இழந்து தம்பி ஹரிபிரசாந்த்துடன் வசித்து வந்த சிவரஞ்சனி, தற்போது தம்பியும் இறந்ததால் ஆதரவின்றி  தனிமரமாக உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com