கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தோடு ஆவின்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தோடு ஆவின் நிறுவனம் முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு விஜயமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் சி.பெரியசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம்.அருள், பி.ஆனந்தராசு, ஆர்.தங்கராசு, அருள்மொழி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத்  தலைவர் ஏ.எம்.முனுசாமி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு இணையத்தின் தலைவர் கே.சுப்பிரமணியம் ஆகியோர் பேசினர்.  
கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தும் பருத்தி கொட்டை, பிண்ணாக்கு, தவிடு, கலப்பு தீவனங்கள் விலை 40 சதவீதம்  உயர்ந்துள்ள நிலையில் பசும்பால் லிட்டருக்கு ரூ.35ம், எருமைப் பாலுக்கு ரூ.45ம் உயர்த்தி வழங்க வேண்டும். கொள்முதல் விலையை உயர்த்தும்போது விற்பனை விலையை உயர்த்தாமல் இருக்க கர்நாடக மாநில அரசைப் போல லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். 
பால் பணம் பாக்கி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து சங்கங்களிலும் போனஸ், ஊக்கத் தொகை வழங்க வேண்டும். ஆவின்பால் மற்றும் பால் பொருள்களின் விற்பனையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் சேர்த்து வழங்க வேண்டும். 
கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ வசதி செய்ய வேண்டும். பால்பவுடர் மற்றும் பால் பொருள்கள் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவர் பி.வெங்கிடுசாமி, மாவட்டச் செயலர் கே.எம்.விஜயகுமார், பொருளாளர் ஏ.கே.செல்லிகவுண்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com