"குப்பைக் கிடங்கில் தீ: வெளியேறும் புகை 2 நாள்கள் நீடிக்கும்'
By DIN | Published On : 20th February 2019 07:40 AM | Last Updated : 20th February 2019 07:40 AM | அ+அ அ- |

குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் புகை இன்னும் 2 நாள்கள் நீடிக்கும் என மாநகராட்சி உதவி ஆணையர் அசோக்குமார் தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சி 4ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயால் கடந்த 3 நாள்களாக புகை வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி 4ஆம் மண்டல உதவி ஆணையர் அசோக்குமார் கூறியதாவது:
குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் புகை வெளியேறுவதால் 24 மணி நேரமும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தப் புகை வெளியேறுவது இன்னும் 2 நாள்களில் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்றார்.