கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழா
By DIN | Published On : 20th February 2019 07:38 AM | Last Updated : 20th February 2019 07:38 AM | அ+அ அ- |

பவானிசாகர் அருகே கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழாவை ஒட்டி, விழாவுக்குச் சென்ற வாகனத்தில் 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை காராட்சிக்கொரை வனசோதனைச் சாவடி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனக் கோட்டம், கெஜஹட்டி கணவாய் மலையில் ஆதி கருவண்ணராயர் பொம்மதேவர் வீரசுந்தரி திருக்கோயில் உள்ளது. உப்பிலிய நாயக்கர் சமூகத்தினருக்குச் சொந்தமான இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பௌர்ணமி நாளில் பொங்கல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
மகா அலங்கார பூஜை, மோயாற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், சுவாமிக்கு அலங்காரம், மஹா தீபாராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பெண்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.
மேலும், கோயில் வளாகத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கான கிடாக்களை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். அவர்கள் கோவில் வளாகத்தில் முகாமிட்டு அங்கேயே சமைத்து உறவினர்களுக்கு விருந்திட்டு மகிழ்ந்தனர்.
கோபி, அந்தியூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர்,சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் லாரி, பேருந்து மூலம் கோயிலுக்கு வந்தனர்.
வனத்துக்குள் செல்லும் வாகனங்களை காராச்சிக்கொரை வனசோதனைச் சாவடியில் வனத் துறையினரின் சோதனைக்குப் பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந்த வாகனத் தணிக்கையில் மறைத்துக் கடத்திய 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். அதேபோல வன விலங்குகளைத் தொந்தரவு செய்யும் மத்தாளம், தப்பாட்டம் போன்ற இசைக்கருவிகளை எடுத்துச்செல்லவும் வனத் துறையினர் தடைவிதித்தனர்.