தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 25th February 2019 10:13 AM | Last Updated : 25th February 2019 10:13 AM | அ+அ அ- |

தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தென்னிந்திய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோட்டில் தென்னிந்திய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில அமைப்பாளர் வீரபத்திரன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் பாபு, புரவலர் கருப்பணன், மாவட்டத் தலைவர் குமரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டம், புதை வட மின் திட்டம் போன்ற திட்டங்களுக்காக குழிகளைத் தோண்டியுள்ளனர். ஆனால் பணிகள் முடிந்த இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் தோண்டிய சாலைகளை சீரமைத்து தார் சாலையாக அமைத்துத் தர வேண்டும். தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஈரோட்டில் உள்ள கடைகளில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வழக்குரைஞர்கள் தினகரன், கனகராஜ், ஆனந்தராஜா, ராஜமாணிக்கம், மாவட்டப் பொறுப்பாளர்கள் கண்ணன், ராஜேஷ், மாரியப்பன், காமாட்சிகண்ணன், விஜயகுமார், சுகுமார், நாகராஜ், குப்புசாமி, சின்னாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.