முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
இன்று முதல்வர் ஈரோடு வருகை: எம்.எல்.ஏ.க்கள் வேண்டுகோள்
By DIN | Published On : 28th February 2019 07:47 AM | Last Updated : 28th February 2019 07:47 AM | அ+அ அ- |

மேம்பாலம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஈரோடு மாநகருக்கு வியாழக்கிழமை வருகை தரும் முதல்வரை வரவேற்க கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என எம்எல்ஏ-க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், ஈரோடு மேற்குத் தொகுதி எம்எல்ஏவுமான கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறப்பு விழா மற்றும் ரூ. 406 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார்.
இதற்கான விழா வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் பிரப் சாலை வணிக வரி அலுவலகம் எதிரே நடைபெறவுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்திவரும் எடப்பாடி கே.பழனிசாமி மக்களுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்து வருகிறார். ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
எனவே, ஈரோடு மாநகருக்கு வரும் முதல்வரை வரவேற்கும் வகையில் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், மாணவரணி, வழக்குரைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி சார்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.