முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
எழுமாத்தூரில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு
By DIN | Published On : 28th February 2019 07:48 AM | Last Updated : 28th February 2019 07:48 AM | அ+அ அ- |

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரி சார்பில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
எழுமாத்தூர், மண்கரடு, கோட்டைமேடு, செல்வ நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தூய்மை பாரதம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம், மரக்கன்றுகள் நடுதல், வாக்காளர் விழிப்புணர்வு, பேரிடர் மேலாண்மை, பிளாஸ்டிக் விழிப்புணர்வு, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள், மகளிருக்கான கோலப் போட்டிகள், யோகா கருத்தரங்கம், இலவச பொது மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இந்த முகாமின் நிறைவு விழா எழுமாத்தூர் மண்கரடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி பாரம்பரிய பாதுகாவலர் பழனிசாமி தலைமை தாங்கினார். தாளாளர் இளங்கோ வரவேற்றார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் அண்ணாதுரை முகாம் திட்ட அறிக்கை வாசித்தார்.
எழுமாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட முகாம் சார்பாக ரூ. 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தை மொடக்குறிச்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் தமயந்தி சிவானந்தம் திறந்து வைத்தார். தொடர்ந்து முகாமில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் ராமன் நன்றி கூறினார்.
விழாவில் பள்ளி பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன், மூத்த வழக்குரைஞர் வி.கே. முத்துசாமி, பள்ளி கட்டட கமிட்டி தலைவர் சிவானந்தம், எழுமாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காயத்ரி பரமசிவம், கல்லூரி அறங்காவலர்கள் பரமேஸ்வரி லிங்கமூர்த்தி, தலைமையாசிரியர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.