முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
நாட்டு மாடுகளை வளர்க்க விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
By DIN | Published On : 28th February 2019 07:47 AM | Last Updated : 28th February 2019 07:47 AM | அ+அ அ- |

அதிக சத்துள்ள பாலினை வழங்கும் நாட்டு மாடுகளை விவசாயிகள் பெருமளவில் வளர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோடு மாவட்டம், நசியனூரில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் தோட்டக்கலைப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான இரண்டு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது:
இக்கருத்தரங்கில் தொழில்நுட்ப வல்லுநர்களின் தொழில் நுட்பங்களைக் கேட்டறிந்து அதன்படி தாங்கள் பயிரிடும் பயிர்களில் தொழில்நுட்பங்களை பயன்படுத்திட வேண்டும். மேலும் இப்பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் நாட்டு மாடுகளையே அதிகம் வளர்த்திட வேண்டும். நாட்டு மாடுகள் குறைந்த அளவே தீவனம் எடுத்துக் கொண்டு, அதிக சத்துக்கள் அடங்கிய பாலினை அளித்து வருகிறது. நாட்டு மாட்டுப் பாலானது விவசாயிகளுக்கு கூடுதலான லாபத்தை பெற்றுத் தருகிறது.
மேலும், மாட்டுக் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்து விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். இதனால் மிகுந்த சத்துக்கள் அடங்கிய விவசாயப் பொருள்களானது சந்தையில் கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும். எனவே, விவசாயிகள் இக்கருத்தரங்கினை முழுமையாக கற்றறிந்து புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற வேண்டும் என்றார்.
முன்னதாக தோட்டக்கலைத் துறை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூலமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியர் திறந்து வைத்து, பார்வையிட்டார். கருத்தரங்கில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பி.தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர்கள் குணசேகரன், நக்கீரன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.