முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டம்
By DIN | Published On : 28th February 2019 07:49 AM | Last Updated : 28th February 2019 07:49 AM | அ+அ அ- |

கோபியில் பாரதப் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை ரூ. 2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
கோபி மைராடா வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு முதல் தவணை நிதியாக ரூ. 2 ஆயிரம் அளிக்கும் ஆணைக்கான சான்றிதழை வழங்கி திட்டத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
மைராடா வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகேசன் வரவேற்றார். கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார்.
கோபி தோட்டக்கலை உதவி இயக்குநர் சசிகலா, உதவிப் பொறியாளர் சுப்பிரமணியம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மகேந்திரன், வேளாண்மை அலுவலர் பவானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், பவானிசாகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பொருள் வல்லுநர் சிவா நன்றி கூறினார்.