நகைக் கடையில் கொலுசு திருடிய ஊழியர் கைது
By DIN | Published On : 05th January 2019 02:59 AM | Last Updated : 05th January 2019 02:59 AM | அ+அ அ- |

ஈரோட்டில் நகைக் கடையில் வெள்ளிக் கொலுசு திருடிய புகாரின்பேரில் கடையின் அலுவலரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு, ஆர்.கே.வி. சாலையில் உள்ள பிரபல தனியார் நகைக் கடையில் வெள்ளி நகைக்கென தனி பிரிவு உள்ளது. வெள்ளி நகைப் பிரிவில் 3 மாதத்துக்கு ஒருமுறை நகைகள் கணக்கு பார்ப்பது வழக்கம். அண்மையில் வெள்ளி நகைப் பிரிவில் நகைகள் கணக்கு வழக்குப் பார்த்தபோது, கொலுசு பிரிவில் 3 க்கும் மேற்பட்ட ஜோடி கொலுசுகள், வெள்ளி நகைகள் கணக்கில் வராமல் இருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஈரோடு நகர் போலீஸார் நடத்திய விசாரணையில், வெள்ளி நகை பிரிவு மேலாளராகப் பணியாற்றிய ஈரோடு, கிருஷ்ணம்பாளையம், ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த மஸ்தான் மகன் சிராஜுதீன் (27) திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சிராஜுதீனை வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த ரூ. 27ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசு, வெள்ளிச் சிலை, நகைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.