பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 05th January 2019 02:59 AM | Last Updated : 05th January 2019 02:59 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் காமதேனு கலை, அறிவியல் கல்லூரி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.கதிரவன் தொடக்கிவைத்தார்.
தமிழகம் முழுவதும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கவும் அதன் பயன்பாட்டைத் தவிர்க்கவும், இதற்கு மாற்றுப் பொருளாக இயற்கை மூலப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட துணிப் பையை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சத்தியமங்கலம் காமதேனு கலை, அறிவியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் ஆர்.பெருள்சாமி தலைமை வகித்தார். செயலாளர் பி.மலர்செல்வி வரவேற்றார். சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னரில் புறப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.கதிரவன் தொடக்கிவைத்தார். பேரணியானது மைசூர் டிரங் ரோடு, கடைவீதி, புதிய பேருந்து நிலையம், வடக்குப்பேட்டையைச் சென்றடைந்தது.
பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவ, மாணவியர் ஊர்வலமாகச் சென்றனர். முன்னதாக, தனியார் திருமண மண்டபத்தில்
நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்ட மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கே.செந்தில்குமார், துணை முதல்வர் நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.