மாட்டுச் சந்தைக்கான தடை நீக்கம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ஈரோட்டில் கடந்த 7 வாரங்களாக (ஜனவரி 5 வரை) அறிவிக்கப்பட்டிருந்த மாட்டுச் சந்தை நடத்துவதற்கான

ஈரோட்டில் கடந்த 7 வாரங்களாக (ஜனவரி 5 வரை) அறிவிக்கப்பட்டிருந்த மாட்டுச் சந்தை நடத்துவதற்கான தடை பின்வரும் நிபந்தனைகளுடன் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட தகவல்:
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று  ஏற்பட்டு இருந்ததால் கால்நடைச் சந்தைகளில் ஜனவரி 5 ஆம் தேதி வரை கால்நடைகள் விற்கவோ, வாங்கவோ அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது நோய் தாக்கம் குறைந்து கோமாரி நோய் பரவுதல் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஈரோடு மாவட்ட கால்நடைச் சந்தைகள் செயல்படுவது தொடர்பான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. எனவே, தற்போது செயல்படவுள்ள கால்நடைச் சந்தைகளில் கீழ்க்கண்ட பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கால்நடைச் சந்தையின் நுழைவாயில், வெளியில் செல்லும் வாயில்களில் கிருமி நாசினிகள் கலந்த நீரில் கால் குளியல் முறை அமைக்க வேண்டும். கால்நடைகள் கூடும் சந்தை இடங்களில் பிளீச்சீங் பவுடர் தெளிக்க வேண்டும். சந்தை கூடும் நாளுக்கு முந்தைய தினம் சந்தை வளாகத்தை 4% சோடியம் கார்பனேட் (அல்லது) 4%  சோடியம் ஹைட்ராக்ஸைடு கொண்டு நன்றாக தெளிக்க வேண்டும் (400 மில்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும் ). 10% சோடியம் கார்பனேட் (அல்லது) 4% சோடியம்  ஹைட்ராக்ஸைடு கிருமி நாசினி கொண்டு கால்நடைகளை ஏற்றிவரும் வாகனங்களின் சக்கரங்கள், அடிப்பகுதியில் நன்றாகப் படும்படி தெளிக்க வேண்டும்.
கால்நடைகளின் கழிவுகள், சாணம், தீவனக் கழிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு சந்தையின் ஓரத்தில் ஆழமான குழியில் சுண்ணாம்புத்தூள் தெளித்து முறையாக மூடவேண்டும். மேற்கண்ட செயல்கள் அனைத்தையும் உள்ளாட்சி நிர்வாகம் கால்நடைச் சந்தைகள் நடக்கும் அனைத்து இடங்களிலும் எவ்விதமான தொய்வும் இன்றி செய்ய வேண்டும். பிற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வருவதை கால்நடை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். அதேபோல, கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மற்ற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களிலிருந்து கால்நடைகள் கொண்டு வருவது கண்டறியப்பட்டால் சந்தைகள் செயல்படுவது மீண்டும் நிறுத்தி வைக்கப்படும். கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடைகளின் உடல் நலன், தகுதியை உறுதிப்படுத்துவதோடு சிகிச்சைப் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளில் நோய் தொற்று மிகுதியாக உள்ளவை சந்தைகளுக்கு அதிக அளவில் வருவதாக அறியப்பட்டால் சந்தைகளை மீண்டும் நிறுத்தி வைக்கும் பொருட்டு அந்த தகவலை மாவட்ட நிர்வாகம் (ம) மண்டல இணை இயக்குநர் அலுவலகத்துக்கு உடனடியாக உள்ளாட்சி, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com