மக்கள் நலத் திட்டங்களை துரிதமாக நிறைவேற்ற அரசு அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் துரிதமாக நிறைவேற்ற அரசு அலுவலர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்


மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் துரிதமாக நிறைவேற்ற அரசு அலுவலர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
வணிக வரி, பதிவுத் துறை முதன்மைச் செயலர், கண்காணிப்பு அலுவலர் கா.பாலசந்திரன் தலைமையில், ஆட்சியர் சி.கதிரவன் முன்னிலையில், அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றுப் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் 2018-2019 ஆம் ஆண்டில் நெல் வகையானது 28,116 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானிய வகைகள் 18,586 ஹெக்டேரிலும், பயறு வகைகள் 5,386 ஹெக்டேரிலும் என 52,103 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எண்ணை வித்துக்கள் 18,198 ஹெக்டேரிலும், பருத்தி 649 ஹெக்டேரிலும், கரும்பு 9,980 ஹெக்டேரிலும், தோட்டக் கலைத் துறை மூலம் பழங்கள், காய்கறிகள், நறுமணப் பொருள்கள், மூலிகைச் செடிகள், மலர்கள் ஆகியவை 31,806 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவையான அளவில் விதைகள், உரங்கள் ஆகியவை இருப்பில் உள்ளன. 
வருவாய்த் துறையின் மூலம் புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு, வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுகாதாரத் துறையின் மூலம் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பொதுமக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர். 
சமூக நலத் துறையில் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது முழுமையாக நிறைவடைந்த பின்னரே ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். எனவே, ஈரோடு மாவட்டத்தில் தொடங்கப்பட்ட அனைத்து மக்கள் நல திட்டங்களையும் விரைந்து செயல்படுத்தி, ஈரோடு மாவட்டத்தை வளர்ச்சிமிகு மாவட்டமாக மாற்ற அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது: 
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளுக்கு கோமாரி நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்திட நடமாடும் வாகனம் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் கால்நடைகளுக்குத் தேவையான தடுப்பு ஊசிகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாளவாடி பகுதியில் கால்நடை ஆய்வகம் விரைவில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
இதில், ஈரோடு மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு, கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், சு.ஈஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன் , ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com