ஈரோடு பகுதியில் மயானத்தை சுருக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள மயானத்தின் பரப்பளவை சுருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள மயானத்தின் பரப்பளவை சுருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.  
ஈரோடு மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், பெரியசேமூர் கூளையன்காடு பகுதியில் 2  ஏக்கர் பரப்பளவில் பொது மயானம்  உள்ளது. அந்த மயானத்தின் ஒரு பகுதியில் திடக்கழிவு  மேலாண்மை திட்டப் பணிக்காக கிடங்கு அமைக்கும் பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு சென்று  பணி நடைபெறும்  இடத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: எவ்வித முன்னறிவிப்புமின்றி மயானத்தின் பரப்பளவைக் குறைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இப்பணியை மேற்கொண்டுள்ளது. கல்லாங்காடு, அம்மன் நகர், இலந்தை காடு, பெரியசேமூர், எல்.ஆர்.வி. காலனி, சிவசக்தி நகர் ஆகிய பகுதி மக்களுக்காக இந்த மயானம்  மட்டுமே பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்படும் திட்டத்தால்  மயானம் காணாமல் போய்விடும் நிலை ஏற்படும்.  எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக  இப்பணிகளைக் கைவிட வேண்டும் என்றனர்.
சுமார் 1  மணி நேரம் வரை இப்பகுதியில் திரண்டு கோரிக்கை முழக்கமிட்ட பொதுமக்கள், அதிகாரிகள் எவரும் வராததால் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி இரண்டாம் மண்டல அலுவலகத்தில் மனு அளிப்பதென  முடிவு செய்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com