ஈரோடு கறவை மாட்டுச்சந்தை: ரூ.2.5 கோடிக்கு விற்பனை

ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச் சந்தையில்   பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுக் குட்டிகள்

ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச் சந்தையில்   பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுக் குட்டிகள் ரூ. 2.5 கோடிக்கு  விற்பனை ஆகியுள்ளநிலையில், வரத்துக் குறைவால் வெளி மாநில வியாபாரிகள் தேவையான எண்ணிக்கையில் மாடுகளை வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரிக் கரை சோதனைச் சாவடி  அருகே வாரந்தோறும் புதன் , வியாழன் ஆகிய இரு நாள்களில்  மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதன்கிழமை  வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை  கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகளும், வளர்ப்புக் கன்றுக்குட்டிகளும்  விற்பனை செய்யப்படுகின்றன. 
தென்னிந்தியாவின் மிகப்பெரிய இச்சந்தைக்கு , ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து  விவசாயிகள், வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.  இங்கு  கொண்டு வரப்படும் மாடுகள் தரமாக உள்ள காரணத்தால்  அவற்றை கொள்முதல் செய்ய கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள்  வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. 
இந்நிலையில்,  கோமாரி நோயின் தாக்கம் காரணமாக கடந்த நவம்பர் 15 முதல் ஜனவரி 5 வரை 7 வாரங்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள  அனைத்து மாட்டுச்சந்தைகளை நடத்த  மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதையடுத்து, கோமாரி நோயின் தாக்கம் குறைந்துள்ளதால்,  பல்வேறு நிபந்தனைகளுடன் சந்தையை நடத்த ஜனவரி 10 ஆம் தேதி மாவட்ட  நிர்வாகம் அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கலுக்கு மறு நாள் வியாழக்கிழமை ஈரோடு கருங்கல் பாளையத்தில்  நடைபெற்ற  சந்தைக்கு  அனைத்து மாநில  வியாபாரிகளின் வருகை அதிக அளவில்   காணப்பட்டது.  ஆனால், விற்பனைக்கு  வந்த மாடுகளின் எண்ணிக்கை குறைந்துபோனதால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது.
இதுகுறித்து, மாட்டுச்சந்தை   மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, கால்நடைத் துறை மருத்துவர் குழுவினர்  சந்தைக்குள் கொண்டு வரப்பட்ட கறவை மாடுகளை பரிசோதனை செய்த  பிறகே அனுமதித்தனர். மேலும்,  நோய் தடுப்புக்கான கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.  இந்த வாரச் சந்தைக்கு, வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில்  வந்திருந்தனர்.   சந்தையில் 250 பசுக்கள், 200 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனைக்காக வந்திருந்தன.  இதில், பசு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ. 2 ஆயிரம்  முதல் ரூ. 12 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளது. மொத்தம் ரூ.2.50 கோடிக்கு  மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com