அம்மா இருசக்கர வாகன திட்டம்: ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st July 2019 09:03 AM | Last Updated : 01st July 2019 09:03 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஜூலை 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத பெண்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகலங்களில் விண்ணப்பங்களை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு 50 சதவீத மானியம் (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மட்டும்) மற்றும் கடன் தொகையில் இருசக்கர வாகனம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு 2018-2019 ஆம் ஆண்டுக்கான அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது.
மாவட்டம் முழுவதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களிடம் இருந்து, கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது, வேலைக்குச் செல்லும் பெண்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஏழை பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மானிய விலையிலான அம்மா இருசக்கர வாகனத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஜூலை 4 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.