திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் ரத்து: லாரி உரிமையாளர்கள் வரவேற்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக திம்பம் மலைப் பாதையில்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக திம்பம் மலைப் பாதையில் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு வனத் துறை சார்பில் வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டதற்கு லாரி உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.
திம்பம் மலைப் பாதை வழியாக செல்லும் சரக்கு வாகனங்களுக்கு வனத் துறை மூலம் நுழைவுக் கட்டணம் வசூலிக்க மாவட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. மேலும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக சரக்கு வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதனால் கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தன. அது மட்டுமின்றி தாளவாடி மற்றும் மைசூரு பகுதியில் இருந்து தமிழகத்துக்கு காய்கறிகள் கொண்டு வருவதில் தடை ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். 
எனவே நுழைவுக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை திம்பம் மலைப் பாதை வழியாக சரக்கு வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும். 24 மணி நேரமும் தங்கு தடையின்றி காய்கறி சரக்கு வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஜூன் 26 ஆம் தேதி முதல் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்தும், 24 மணி நேரமும் திம்பம் மலைப் பாதை வழியாக சரக்கு வாகனங்களை இயக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. 
இதையடுத்து, கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com