சுடச்சுட

  

  ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும்

  By DIN  |   Published on : 02nd July 2019 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்பது  மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாகும்  என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
   ஈரோட்டில்  அவர் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: 
  ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அந்தந்த மாநிலங்களின் உரிமைகள், ஜனநாயக விதிகளுக்கு மாறானது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 33 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சிகளுக்கு 63 சதவீத வாக்குகளும் பதிவானதை வைத்து பாஜகவின் கடந்த 5 ஆண்டு செயல்பாட்டின் மீது மக்கள் எவ்வளவு அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை காண முடிகிறது.
  புதிய கல்வி கொள்கையை அறிவித்து ஒரு மாதத்துக்குள் கருத்து கூற அழைப்பு விடுத்துள்ளனர். அறிக்கையைப் படித்து கருத்துக்கூற 6 மாத காலம் அவகாசம் தேவை. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்பது அந்தந்த மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாகும். 
  காவிரி மேலாண்மை வாரியம் கூடி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனே வழங்க வேண்டும் எனக்கூறியும் இன்று வரை வழங்கப்படவில்லை. மாநில அரசும் வலியுறுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது. காவிரி நீரைத் திறம்பட பெறாததால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 8  ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. ஒரு போக சாகுபடியைக்கூட உறுதி செய்ய முடியவில்லை. இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை தயாரித்து மத்திய , கர்நாடக அரசுகளிடம் 8 ஆண்டுகளுக்கு குறுவைக்கான இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும். ரயில்வே துறை ஒரு குழு அமைத்துள்ளது. அந்தக் குழு பயணிகள் ரயிலை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் சுகாதாரம், குடிநீர், மின் வெட்டு, சாலை வசதி, குடிமராமத்துப் பணிகள் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுங்கட்சியினர் தள்ளி போட்டு வருகின்றனர் என்றார். 
  கட்சியின் மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் துளசிமணி ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai