திம்பம் மலைப் பாதையில் அதிக பாரம்  ஏற்றி வந்த 8 சரக்கு லாரிகளுக்கு அபராதம்

திம்பம் மலைப் பாதையில் அதிக பாரம் ஏற்றி வந்த 8 சரக்கு லாரிகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திங்கள்கிழமை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

திம்பம் மலைப் பாதையில் அதிக பாரம் ஏற்றி வந்த 8 சரக்கு லாரிகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திங்கள்கிழமை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழகம் - கர்நாடக மாநிலத்திற்கிடையே 24 மணி நேரமும் பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதிக பாரம் ஏற்றிச்செல்லும் சரக்கு லாரிகள் திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்தும், பழுது ஏற்பட்டும் நின்றுவிடுவதால் பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இதையடுத்து 4.2 மீட்டர் உயரத்துக்கும், 3.3 மீட்டர் அகலத்துக்கும் அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகளைக் கண்டறிய உயரத்தடுப்புக் கம்பி அமைக்கப்பட்டது. 
இந்நிலையில், கர்நாடக மாநிலத்திலிருந்து தேங்காய் மட்டை மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பாரம் ஏற்றி வந்த 8 சரக்கு லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக உயரத்தில் பாரம் ஏற்றப்பட்டிருந்ததால் உயர்த் தடுப்புக்கம்பி வழியாக சரக்கு லாரிகள் செல்ல முடியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சென்று 8 சரக்கு லாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க கோபி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்குப் பரிந்துரை செய்தார். இதையடுத்து,  அபராதம் விதிக்கப்பட்ட சரக்கு லாரிகளில அதிக உயரமாக உள்ள சரக்குகளை பொக்லைன் மூலம் அகற்றி சரியான அளவு பாரத்துடன் லாரி தடுப்புக் கம்பி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த அபராதம் விதிப்பு காரணமாக அதிக உயரமான வாகனங்கள் வருவது கட்டுப்படுத்தப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com