மல்லிகார்ஜுனா கோயிலுக்குச் செல்ல வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

தாளவாடி அருகே உள்ள கொங்கள்ளி மல்லிகார்ஜுனா கோயிலுக்கு செல்ல வனத் துறையினர்

தாளவாடி அருகே உள்ள கொங்கள்ளி மல்லிகார்ஜுனா கோயிலுக்கு செல்ல வனத் துறையினர் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக, கர்நாடக பக்தர்கள் 1000- க்கும் மேற்பட்டோர் வனத் துறை சோதனைச் சாவடியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கொங்கள்ளியில் பிரசித்திபெற்ற மல்லிகார்ஜுனா கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்கள் மட்டுமே செல்வார்கள். இங்கு திங்கள், வெள்ளி மற்றும் அமாவாசை நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்தக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், மைசூரு, கொள்ளேகால், குண்டல்பேட் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.  இக்கோயில் வனப் பகுதியில் அமைந்துள்ளதால்  கடந்த 6 மாதங்களுக்கு முன்னிருந்து வனத் துறை சார்பில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக, கர்நாடக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல செவ்வாய்க்கிழமை வந்தனர். இவர்கள் வனத் துறை சோதனைச் சாவடியில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், வனத் துறையினர் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.
இதைக் கண்டித்து இரு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் 1000- க்கும் மேற்பட்டோர் வனச் சோதனைச் சாவடியை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் அன்பரசு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமியும் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் எந்த அறிவிப்பும் இன்றியும், பொதுமக்கள் கருத்துகளைக் கேட்காமலும் வனத் துறையினர் வாகனக் கட்டணம் வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது என்றனர். 
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்,  தற்காலிகமாக நுழைவுக் கட்டணம் இல்லாமல் செல்லலாம் எனவும், இன்னும் ஒரு வாரத்தில் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், ஊர்த் தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி இறுதி முடிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்று,  3 மணி நேரம் நடந்த முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com