சுடச்சுட

  

  பணத்துக்காக மூதாட்டியை எரித்துக் கொல்ல முயற்சி: பேரனின் மனைவி கைது

  By DIN  |   Published on : 13th July 2019 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்துத் தர மறுத்த மூதாட்டியை எரித்துக் கொலை செய்ய முயற்சித்த பேரனின் மனைவியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
  கரூர் மாவட்டம், உப்புப்பாளையம் அருகே குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாயம்மாள் (92). இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் மூலம் மூதாட்டிக்கு பேரன், பேத்திகள் உள்ளனர்.
  ஆனால், கடைசி மகன் கணேசனுக்கு வாரிசு இல்லை. இதனால் கணேசனின் சொத்து அவரது தாய் ராமாயம்மாள் பெயரில் உள்ளது. இந்நிலையில், ராமாயம்மாள் மூத்த மகனுடைய மகனுக்கு தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது.
  ஆனால், தம்பதியினர் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்ச்செல்வியின் குழந்தைகளோடு சேர்ந்து இருக்க விரும்பிய ராமாயம்மாள், கடந்த ஓராண்டாக தமிழ்ச்செல்வியுடன் ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியில் வசித்து வந்தார். இந்நிலையில், யாருக்கும் தெரியாமல் தமிழ்ச்செல்வி மூதாட்டியை அழைத்துச் சென்று சொத்தை தனது பெயரில் மாற்றிக் கொண்டார். 
  இந்நிலையில், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொடுக்க மூதாட்டியிடம் தமிழ்ச்செல்வி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
  இதில் கோபமடைந்த தமிழ்ச்செல்வி மூதாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயை வைத்துள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மூதாட்டியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
  இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின்பேரில் ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து தமிழ்ச்செல்வியைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.                                                                          

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai