சுடச்சுட

  

  அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் மாயம்: போலீஸில் தந்தை புகார்

  By DIN  |   Published on : 14th July 2019 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு அவரது தந்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். 
  ஈரோடு, வி.வி.சி.ஆர்.நகர், குப்பிபாளையம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (62). இவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த மனு விவரம்:
   எனது மகள் பர்வீனை, தாஜுதீன் (38) என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தோம். அவர்கள் எங்கள் வீடு அருகே வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தாஜுதீன் லாரி ஓட்டுநராக உள்ளார். இதனால் 15 நாள்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வந்து செல்வார். கடந்த சில நாள்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது.  
  இதில் விரக்தி அடைந்த பர்வீன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை தாஜுதீன் மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 9 ஆம் தேதி பர்வீன் மருத்துவமனையிலிருந்து மாயமாகிவிட்டதாக தாஜுதீன் தெரிவித்தார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி, எனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai