உயர் மின் கோபுரம் திட்டம்: புதுதில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

விளை நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினர், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை புதுதில்லியில் தொடர் முழக்க


விளை நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினர், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை புதுதில்லியில் தொடர் முழக்க போராட்டம் நடத்த உள்ளனர். 
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி காவல் துறை துணையுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளன. இதனையடுத்து புதுதில்லி, ஜந்தர் மந்தரில் தொடர் முழக்க போராட்டம் நடத்த உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். 
இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கி.வெ.பொன்னையன் கூறியதாவது:
வேளாண் விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க வழிவகுக்கும் 1885ஆம் ஆண்டு தந்தி சட்டத்தை மாற்ற வேண்டும், உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட மின்பாதைக்கு நில வாடகை கொடுக்க வேண்டும், மின்பாதையை புதைவடமாக சாலையோரம் கொண்டு செல்ல வேண்டும், 1962ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருள்கள் குழாய் பதிப்பு சட்டத்தை மாற்ற வேண்டும், கெயில், ஐ.டி.பி.எல் (பாரத் பெட்ரோலியம்) குழாய்களை விளை நிலங்களில் கொண்டு செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லி, ஜந்தர் மந்தரில் வரும் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தொடர் முழக்க போராட்டம் நடத்த உள்ளோம். 
இப்போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வரும் 15ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோரையும், தில்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனையும் கூட்டமைப்பு சார்பில் நேரில் சந்திக்கவுள்ளோம். இப்போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com