பெருந்துறை கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு எதிர்ப்பு: கோபியில் கடையடைப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையின் உள் பகுதியிலிருந்து செயல்படுத்தப்படும் பெருந்துறை கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையின் உள் பகுதியிலிருந்து செயல்படுத்தப்படும் பெருந்துறை கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபிசெட்டிபாளையம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
 ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை 600 ஆண்டுகளுக்கு முன்பு மைசூரை ஆண்ட மன்னரால் பவானியின் குறுக்கே கட்டப்பட்ட பழைமைவாய்ந்த அணையாகும். இந்த அணையின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்கள் மூலம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய மூன்று வட்டங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கொடிவேரி அணை ஏழைகளின் குற்றாலமாக விளங்கும் சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.
 இந்நிலையில் கொடிவேரி அணையின் உள் பகுதியிலிருந்து, தடப்பள்ளி பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் வழியில் பெருந்துறை கூட்டுக்குடிநீர்த் திட்டத்துக்காக மிகப்பெரிய கிணறு அமைக்கும் பணியை குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கியுள்ளது. 
 இதனால் தடப்பள்ளிக்கு வரும் தண்ணீர் குறையும், மூன்று வட்டங்களும் பாலைவனமாகும், கொடிவேரி அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும், சுற்றுலாத் தலம் பாதிக்கப்படும் என்பதால் கொடிவேரியின் உள் பகுதியில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டத்தை அணையின் மேல்புறத்திலோ அல்லது அணையின் கீழ் புறத்திலோ செயல்படுத்த வேண்டும் என கொடிவேரி பாசன விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் முழுவதும் சனிக்கிழமை ஒருநாள் கடையடைப்பு செய்து எதிர்ப்பை வெளிப்படுத்துவது என கொடிவேரி  அணையின் பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.
 கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மளிகைக் கடை, உணவகங்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளையும் சனிக்கிழமை அடைத்தனர்.
 கோபிசெட்டிபாளையம் நகரப் பகுதி மட்டுமில்லாது டி.என்.பாளையம், எளூர், கரட்டடிபாளையம், கூகலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் கோபிசெட்டிபாளையத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
 மேலும் விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் பெரியார் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல் துறையினர் இப்போராட்டத்துக்கு அனுமதி வழங்காததால் தனியார் திருமண மண்டபத்தில் கொடிவேரி பாசன விவசாயிகள் உள்ளிருப்பு, கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com