வனப் பகுதியில் சாலை வசதி இல்லாததால் சிறுவனின் சடலத்தை 12 கி.மீ. தூரம் தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற கிராம மக்கள்

சத்தியமங்கலத்தை அடுத்த மல்லியம்துர்க்கம் கிராமத்துக்கு வனப் பகுதியில் சாலை வசதி இல்லாததால் உடல்நலக்குறைவால் உயிரிழந்த

சத்தியமங்கலத்தை அடுத்த மல்லியம்துர்க்கம் கிராமத்துக்கு வனப் பகுதியில் சாலை வசதி இல்லாததால் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை அடர்ந்த வனப் பகுதியில் 12 கி.மீ. தூரத்துக்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி தூக்கிச் சென்றனர்.
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த மல்லியம்துர்க்கத்தைச் சேர்ந்தவர் அழகேசன். பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர். இவரது மகன் காசிபிரசாத் (10) அங்குள்ள அரசுப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக காசி பிரசாத் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
 அவருக்கு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையிலும், அதைத் தொடர்ந்து கோவை மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.  இருப்பினும் நோய் குணமடையாததால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அங்கு காசிபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது சடலம் ஆம்புலன்ஸ் மூலம் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது. ஆனால் கடம்பூரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் சாலை வசதி இல்லாத, செங்குத்தான உயரத்தில் உள்ள மல்லியம்துர்க்கம் வனக் கிராமத்துக்கு சடலத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
 இதனால் அடர்ந்த காட்டுப் பகுதியில் 12 கி.மீ. தூரம் மாணவர் சடலத்தை தொட்டில் கட்டி சுமந்து கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் மல்லியம்துர்க்கம் கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்து, கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என இக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தற்போது வரை சாலை வசதி ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com