நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த விவசாயி கைது
By DIN | Published On : 19th July 2019 08:52 AM | Last Updated : 19th July 2019 08:52 AM | அ+அ அ- |

கடம்பூர் மலைப் பகுதியில் 2 நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்த விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்தக் கிராமங்களில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பதாக கடம்பூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடம்பூர் மலைப் பகுதியில் உள்ள திண்ணையூர் கிராமத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது பெருமாள் (55) என்ற விவசாயி தனது நிலத்தில் உள்ள வீட்டில் 2 நாட்டுத் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும் அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருந்த அவரைக் கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
ஏற்கெனவே கடம்பூர் மற்றும் பங்களாப்புதூர் காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட குன்றி, கிளமன்ஸ் தொட்டி, இந்திராநகர், தொட்டகோம்பை பகுதிகளில் அனுமதியின்றி வைத்திருந்த 5 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.