ஈரோட்டுக்கு ரயிலில் அனுப்பப்பட்ட பொருள்கள் கொள்ளை: போலீஸ் தீவிர விசாரணை

ஜம்மு காஷ்மீரில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ரயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பார்சல் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டுக்கு ரயிலில் அனுப்பப்பட்ட பொருள்கள் கொள்ளை: போலீஸ் தீவிர விசாரணை

ஜம்மு காஷ்மீரில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ரயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பார்சல் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 ஜம்மு காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் ஹிமசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழக்கிழமை காலை ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரயிலின் பார்சல் பெட்டியில் வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட எல்இடி டிவிக்கள், புளூடூத் ஸ்பீக்கர்கள், மடிக்கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களும், கேஸ் ஸ்டவ், பாத்திரங்கள் என வீட்டு உபயோகப் பொருள்களும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
 ரயில் ஈரோடு வந்ததும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ரயிலில் பார்சல் கொண்டு வரப்படும் பெட்டியைத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது பார்சல்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு அதில் பொருள்கள் இல்லாமல் காலிப் பெட்டிகளாகக் கிடந்தன.
 இதுதொடர்பாக ஈரோடு ரயில்வே பார்சல் பிரிவு அதிகாரிகளுக்குத் தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
 அங்கு வந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெட்டியில் சோதனை செய்தனர். மேலும், ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் விஜேந்திரகுமார் மீனா தலைமையிலான போலீஸாரும் பார்சல் பெட்டியில் சோதனை செய்தனர். இதில் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மீதமுள்ள பொருள்களை பார்சல் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனர். கொள்ளைபோன பொருள்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என பார்சல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது:
 ஹிமசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 நாள்களுக்கும் மேலாகப் பல்வேறு மாநிலங்கள் வழியாகப் பயணித்து ஈரோடு வருகிறது. இந்த ரயிலில் புதுதில்லியில் இருந்தும், மேலும் சில மாநிலங்களில் இருந்தும் எலக்ட்ரானிக் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் பல்வேறு ஜவுளிப் பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளன.
 இதில் ஈரோடு வந்த எலக்ட்ரானிக் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் மாயமாகி உள்ளன. சம்பந்தப்பட்ட பார்சல் உரிமையாளர்கள் புகார் அளித்தால்தான் மாயமான பொருள்களின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com