பெண் கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 24th July 2019 08:45 AM | Last Updated : 24th July 2019 08:45 AM | அ+அ அ- |

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (38), தறிப் பட்டறைத் தொழிலாளி. இவரது மனைவி சீதா (27). இவர்களுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சீதாவும் அதே பகுதியில் உள்ள தறிப் பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது சீதாவுக்கு சங்ககிரியைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர் கணவரைப் பிரிந்து சங்ககிரியில் அந்த இளைஞருடன் வசித்து வந்தார். குழந்தைகள் சீதாவின் பெற்றோரிடம் இருந்தனர்.
சீதா கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி ஈரோட்டில் உள்ள தனது குழந்தைகளையும், பெற்றோரையும் பார்க்க வந்தார். அவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் சாலையில் சென்றபோது, சீதாவின் கணவர் நாகராஜ் அவரை கத்தியால் குத்தியதில் சீதா அதே இடத்தில் உயிரிழந்தார். அவரைத் தடுக்க முயன்ற சீதாவின் தாய் ரேணுகாவுக்கும் காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஈரோடு- வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி விமலா முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட நாகராஜுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சுமதி ஆஜரானார்.