Enable Javscript for better performance
குண்டேரிப்பள்ளம் அணையை தூர்வார அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குண்டேரிப்பள்ளம் அணையை தூர்வார அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குண்டேரிப்பள்ளம் அணையை தூர்வார அனுமதிக்க வேண்டும் என கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் முதல்முறையாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 
    ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதம் முதல் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவுக்கு உள்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று வந்தனர்.
    இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளை சரிவர வெளிப்படுத்த முடிவதில்லை என தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். இதனால், கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார்.
    இதன் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் முறையாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கோபி, பவானி, அந்தியூர், நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய தாலுகாக்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 
    கூட்டத்தில், குண்டேரிப்பள்ளம் அணை 39 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் அணையை தூர்வார வனத் துறை, பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அனுமதி வழங்க வேண்டும். கொடிவேரி அணை பாசனத்துக்காக கட்டப்பட்ட அணை என்ற போதும், தற்போது சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
    மாதம்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. இதனை பொதுப் பணித் துறையினர் உபயோகப்படுத்தி வருகின்றனர். கொடிவேரி அணையின் மூலம் வரும் வருவாயை கொடிவேரி அணைப் பகுதியில் சுகாதாரத்துக்கும், கட்டுமானப் பணிக்கும், வாய்க்கால்களை மேம்படுத்தவும் செலவு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
    மேலும், ஒவ்வொரு ஆண்டும் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு முதல் போக சாகுபடிக்கு மே, ஜூன் மாதங்களில் தண்ணீர் திறப்பது வழக்கம். 
    இந்த ஆண்டு ஜூலை மாதம் முடிய உள்ள நிலையில் ஆகஸ்டு முதல் வாரத்தில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
    கூகலூர் கிளை வாய்க்காலில் வலதுகரை இல்லாமல் முறைகேடாக பல இடங்களில் தண்ணீர் திருடப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் வலது கரையை அமைத்து முறைகேடாக தண்ணீர் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    கூகலூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். வனத்தை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது. வனப் பகுதியை ஒட்டி வெட்டப்பட்டுள்ள அகழிகள் மண் சரிந்து மூடியுள்ளதால் மீண்டும் அகழியை ஆழப்படுத்த வேண்டும்.
    சோலார் விளக்குகள் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். புகார்கள் குறித்து 15 தினங்களுக்குள் துறைரீதியான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
    ஒவ்வொரு  மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai