Enable Javscript for better performance
கோபி வட்டாரத்தில் சொட்டுநீர்ப் பாசனம்: விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்- Dinamani

சுடச்சுட

    

    கோபி வட்டாரத்தில் சொட்டுநீர்ப் பாசனம்: விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோபி வட்டாரத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
    லக்கம்பட்டி கிராமத்தில் கூட்டுப் பண்ணை அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் வே.ஜீவதயாளன், கரட்டடிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் என்.டி.குறிஞ்சிநாதன், நிலவள வங்கித் தலைவர் கே.என்.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குநர் பேசுகையில், நடப்பு ஆண்டில் லக்கம்பட்டி மற்றும் சிறுவலூர் கிராமங்களில் கூட்டுப் பண்ணைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டில் சொட்டுநீர், தெளிப்புநீர் (ஸ்பிரிங்லர்) மழைத்துவுவான் (ரெயின் கன்) ஆகிய நுண்ணீர்ப் பாசனக் கருவிகளுக்கு 100 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டன.
    அதேபோல், நடப்பு நிதி ஆண்டிலும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் அதிகபட்சம் 5 ஏக்கர் வரையிலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் அதிகபட்சம் 12 ஏக்கர் வரையிலும் மானியம் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக 25க்கும் மேற்பட்ட பாசன நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.
    நடப்பு ஆண்டில் கோபி வட்டாரத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்காக 1,225 ஏக்கருக்கு ரூ.3.15 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளம்  உள்ளிட்ட சிறு தானியங்கள், பயறு வகைகள், பருத்தி, எண்ணெய் வித்துக்கள், தென்னை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படும்.
    மேலும், கோபி வட்டாரத்தில் உள்ள 32 வருவாய் கிராமங்களிலும் வேறுபாடு இன்றி சொட்டுநீர் அல்லது தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்க தீவிர கிராமக் கூட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பாசன நீரை சிக்கனப்படுத்தி பயன்படுத்தப்படுவதுடன், பயிரின் வேர் அருகே பயிருக்குத் தேவையான சத்துக்கள் மற்றும் மருந்துகள் சேதாரமின்றி கிடைக்கும்.
    மேலும், களைத் தொல்லை குறைந்து, கூலி ஆள் செலவும் மீதமாகும். வறட்சி காலத்திலும், குறைந்த நீரில் நிறைந்த மகசூல் கிடைக்கும். இதனால், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
    குறைந்தது ஒரு ஏக்கர் சொட்டு நீர்ப் பாசனம்  அமைக்கும் விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசன மானியத்துடன் கூடுதலாக குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.25,000 (கோபி மற்றும் கூகலூர் குறுவட்டம் மட்டும்) நீர் இறைக்க ஆயில் என்ஜின் அல்லது மின் மோட்டார் அமைக்க ரூ.15,000ம், பாசன நீரை வயலுக்கு அருகில் கொண்டு செல்ல குழாய்கள் நிறுவ ரூ.10,000ம், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க ரூ.40,000 (வட்டாரம் முழுவதும்) உள்ளிட்டவைக்க கூடுதல் மானியம் வழங்கப்படும்.
    இவற்றில் அனைத்து இனங்களிலும் உள்ள மானியத்தை அல்லது விவசாயிகளுக்கு தேவைப்படும் மானியங்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
    மேலும் விவரங்களுக்கு கோபி வேளாண்மை விரிவாக்க மையத்தை உடன் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தினார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்ச்செல்வன், விசாலாட்சி ஆகியோர் செய்திருந்தனர். வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai