Enable Javscript for better performance
சென்னிமலை அருகில் சாயக் கழிவுகளை கொட்டிய டிராக்டர்கள் சிறைபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னிமலை அருகில் சாயக் கழிவுகளை கொட்டிய டிராக்டர்கள் சிறைபிடிப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னிமலை அருகே சிப்காட் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட குளத்தை தூர்வாரி அந்தக் குளத்தின் உள் பகுதியிலேயே கழிவுகளை கொட்டியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர்களை புதன்கிழமை சிறைபிடித்தனர். 
    சென்னிமலை ஒன்றியம் வரப்பாளையம் ஊராட்சியில் ஓடைக்காட்டூர் குளம் உள்ளது. இந்தக் குளம் சுமார் 13 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தில் சிப்காட் சாயக்கழிவுகள் நேரடியாக கலந்ததால் குளம் முழுவதும் சாயக் கழிவாக மாறியது. மழைக் காலங்களில் குளத்துக்கு அதிக அளவில் சாயக்கழிவுகள் வந்ததால் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் மாசுபட்டன.
    இதனால், ஓடைக்காட்டூர் குளத்தில் அதிக அளவில் சாயக் கழிவுகள் படர்ந்ததால், அதனை தூர்வாரி சாயக்கழிவுகள் படர்ந்த மண்ணை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். 
    இந்த நிலையில், ஓடைக்காட்டூர் குளத்தை தூர்வாரி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு சார்பில் ஏலம் விடப்பட்டது. இதில், ஏலம் எடுத்தவர்கள் குளத்தில் இருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட கழிவுகளை டிராக்டர்களில் ஏற்றி அதை குளக்கரையின் உள் பகுதியில் கொட்டி வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கழிவுகள் ஏற்றிய டிராக்டர்களை புதன்கிழமை சிறைபிடித்தனர். 
    அப்போது, குளத்தில் இருந்து எடுக்கும் கழிவுகளை குளத்தின் உள் பகுதியிலேயே கொட்டினால் மழைக் காலங்களில் அந்தக் கழிவுகள் மீண்டும் குளத்துக்கு உள்ளேயேதான் வரும். இதனால், குளத்தை தூர்வாரி எந்த பயனும் இல்லை எனக் கூறி ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    மேலும், குளத்தின் உள் பகுதியில் கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    அப்போது, குளத்தில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை குளத்துக்கு வெளியே கொட்டி வைத்து அதனை சிப்காட் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் உள்ள குடோனுக்கு கொண்டுச் சென்று பாதுகாப்பாக வைப்பதாகவும், பின்னர் அங்கிருந்து இரண்டு மாதத்தில் அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்தி விடுவதாகவும் ஒப்பந்ததாரர் உறுதியளித்தார்.
    அதைத் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai