Enable Javscript for better performance
சென்னிமலை பகுதியில் வட மாநில தொழிலாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    சென்னிமலை பகுதியில் வட மாநில தொழிலாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை

    By DIN  |   Published on : 25th July 2019 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னிமலை பகுதியில் தங்கியிருக்கும் வட மாநில தொழிலாளர்களிடம், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர், பெருந்துறை வட்டாட்சியர், பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் போலீஸார் செவ்வாய்கிழமை இரவு திடீர் விசாரணை நடத்தினர். 
    பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை செய்து வருகின்றனர்.
    தற்போது கட்டட வேலை உள்பட பெரும்பாலான பணிகளில் வட மாநில தொழிலாளர்கள்தான் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் யாராவது முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதுடன், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து அடிக்கடி போலீஸார் திடீர் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெருந்துறை பகுதியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த பங்களாதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். 
    இந்த நிலையில், சென்னிமலை பகுதியில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களிடம் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், பெருந்துறை வட்டாட்சியர் க.துரைசாமி, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாகுமார், சென்னிமலை காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் விசாரணை மேற்கொண்டனர். 
    சென்னிமலை அருகே, கண்ணகி தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களின் ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்தனர்.
    அதேபோல், சென்னிமலை அருகே கொத்தம்பாளையத்தில் உள்ள அதே நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்த்தனர்.
    அப்போது, அனைத்து தொழிலாளர்களின் முழு முகவரி குறித்த ஆவணங்களையும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் முறையாக வைத்திருந்தனர். முழு முகவரி குறித்த அசல் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது வீடு வாடகைக்கு கேட்டால் கொடுக்கக் கூடாது என பொதுமக்களுக்கு போலீஸார் அறிவுறுத்தினார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai