Enable Javscript for better performance
பரிகாரத்துக்கு பயன்படுத்திய பொருள்கள் மீண்டும் விற்பனை செய்யப்படுவதாக புகார்- Dinamani

சுடச்சுட

    

    பரிகாரத்துக்கு பயன்படுத்திய பொருள்கள் மீண்டும் விற்பனை செய்யப்படுவதாக புகார்

    By DIN  |   Published on : 25th July 2019 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பவானி கூடுதுறையில் பரிகாரத்துக்கு பயன்படுத்திய பொருள்களை கடைகளில் கொடுத்து மீண்டும் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
    பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் முக்கிய பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் பரிகாரத்துக்காக கோயிலுக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக அமாவாசை, ஆடிப்பெருக்கு நாள்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
    இந்நிலையில், பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கோயில் நிர்வாகத்தின் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளதாகவும், கூடுதல் விலைக்கு கடைகளில் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதோடு பரிகாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை மீண்டும் கடைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
    இதுகுறித்து இந்து முன்னணி ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் க.சி.முருகேசன்,  மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் அண்மையில் அளித்த மனு விவரம்:
    கோயில் வளாகத்தில் ஏலம் விடப்பட்டுள்ள கடைகளில் தேங்காய், பழம் போன்ற பூஜைப் பொருள்களின் விலைப் பட்டியல் கடைகளுக்கு முன்பு வைக்கப்படுவதில்லை. பக்தர்களிடம் கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 
    இதேபோல பரிகாரம் செய்ய வரும் பக்தர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மேலும், பரிகாரத்துக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் மீண்டும் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    கோயில் நிர்வாகம் சார்பில் புரோகிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை அணிவதில்லை. இதனால், போலி புரோகிதர்கள் அதிக அளவில் நடமாடி வருகின்றனர். கோயில் வளாகத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது.
    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருள்கள் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai