முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மொடக்குறிச்சி அருகே தொடர் திருட்டு: 3 பேர் கைது
By DIN | Published On : 30th July 2019 09:15 AM | Last Updated : 30th July 2019 09:15 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் பகுதிகளில் நிதி நிறுவனத்தில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரியை அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (35). இவர் எழுமாத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதேபோல், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த நல்லசாமி (39) என்பவர் மொடக்குறிச்சியில் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஜூன் 24 ஆம் தேதி ஒரு பைக்கில் வந்த மூன்று பேர் அடுத்தடுத்து பைனான்ஸ் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.98 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இரண்டு பைனான்ஸ் கடைகளில் நடந்த திருட்டில் சிசிடிவி கேமராவில் திருடர்களின் முகம் பதிவாகி இருந்தது. இதனைக் கைப்பற்றியை போலீஸார் கொள்ளையிடில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட போலீஸார் சந்தேகத்தின் பேரில் திருடர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் மொடக்குறிச்சி மற்றும் எழுமாத்தூர் பைனான்ஸ் கடைகளில் நடந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாலர் சக்தி கணேசன், ஈரோடு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் மேற்பார்வையில் மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் சுப்புரத்தினம், எஸ்.ஐ.கள் தேவராஜ், ஆனந்த் மற்றும் போலீஸார் பொன்னுசாமி ஆகியோர் 3 திருடர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த திருட்டு சம்பவம் குறித்து தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.