வட மாநிலங்களில் இருந்து மஞ்சள் வரத்து: ஈரோடு சந்தையில் குவின்டாலுக்கு ரூ.200 வரை விலை சரிவு

வட மாநிலங்களில் இருந்து மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் ஈரோடு சந்தையில் குவின்டாலுக்கு ரூ.200 வரை குறைந்துள்ளது. 

வட மாநிலங்களில் இருந்து மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் ஈரோடு சந்தையில் குவின்டாலுக்கு ரூ.200 வரை குறைந்துள்ளது. 
ஈரோடு மாவட்டத்தில் நற்டப்பாண்டு 5 ஆயிரம் ஹெக்டேரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் அறுவடைப் பணி பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தது.  அறுவடைப் பணி முழுமையாக முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட சாகுபடிக்கு நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 
சாகுபடி செலவுக்கு பணம் தேவைப்படும் நிலையில் விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 
இதன் காரணமாக வரத்து அதிகரித்துள்ளதால் விலை குவின்டாலுக்கு ரூ.200 வரை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து மஞ்சள் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை குறைவு என்றபோதிலும், பவானிசாகர் அணையில் தண்ணீர் இருந்ததால் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் ஓரளவு மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டது. 
அதேபோல், தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கிணற்று நீர், ஆழ்துளை கிணற்று நீரால் சாகுபடி செய்தும் போதிய தண்ணீர் இல்லாததால் மகசூல் கிடைக்கவில்லை. இந்தச் சூழலிலும் மஞ்சள் விலை உயரவில்லை. 
அதே சமயத்தில் ஆந்திர மாநிலம், நிஜாமாபாத், சாங்ளி போன்ற சந்தையில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 6 லட்சம் மூட்டைகள் மஞ்சள் வரத்து இருந்தன. இந்த ஆண்டில் கடந்த 4 மாதங்களில் 10 லட்சம் மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. 
அதுபோல், மகாராஷ்டிரா மாநிலம், பஸ்மத், நாம்தேட் போன்ற பகுதிகளில் தினமும் 10 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் வந்துள்ளன. 
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கடந்த 2 மாதங்களாக மஞ்சளை இருப்பு வைத்திருந்தனர்.
இந்த நிலையில், அடுத்தகட்ட சாகுபடி மற்றும் குழந்தைகளின் கல்விச்செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளை சமாளிக்க மஞ்சளை தற்போது விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த சில வாரங்களாக தினமும் 50 விவசாயிகள் வந்த நிலையில் தற்போது 100 விவசாயிகள் மஞ்சள் கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சில நாள்களாக மஞ்சள் குவின்டால் ரூ.200 வரை சரிவடைந்துள்ளது.  
இனி வரும் காலத்தில் மஞ்சள் விலை உயருமா, அல்லது அதே விலை நீடிக்குமா என்பது மழையைப் பொருத்தே அமையும். மழை நன்றாக பெய்து மஞ்சள் சாகுபடி பரப்பளவு அதிகரித்ததால் விலை குறையும், மழையில்லாமல் சாகுபடி பரப்பளவு குறைந்தால் விலை அதிகரிக்கும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com