ரயிலில் கடத்தி வந்த 36 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 4 பேர் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் 36 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக பெண் உள்பட 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் 36 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக பெண் உள்பட 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவை மார்க்கமாக செல்லும் ஆலப்புழா விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் தலைமையிலான போலீஸார் ஆலப்புழா விரைவு ரயிலில் ஆய்வு நடத்தினர். அப்போது, அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் சந்தேகப்படும்படியாக 4 பேர் சிறிய பண்டல்களை கொண்டுச் சென்றுள்ளனர். 
தொடர்ந்து போலீஸார் அவர்களை சேலத்தில் இருந்து கண்காணித்து வந்தனர். ஈரோடு ரயில் நிலையத்தை அடைந்ததும், அந்த நபர்கள் கொண்டு வந்த பண்டல்களுடன் ரயிலில் இருந்து இறங்கிச் செல்ல முற்பட்டனர். 
அப்போது, 4 பேரையும் பிடித்த போலீஸார் அவர்கள் வைத்திருந்த பண்டல்களை சோதனை செய்தனர். அப்போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, ஈரோடு சூரம்பட்டி போலீஸில் 4 பேரையும் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் ஆந்திர மாநிலம், சாம்பல்கோட் பகுதியைச் சேர்ந்த வீரப்பத்ர ராவ் (32), வெங்கட்ராமன் (43), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த முருகேசன் (41), அவரது சகோதரியான பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சாந்தி (49) ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. 
இவர்கள் ஆந்திரா மாநிலம், டாடா நகர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, 4 பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்த 36 கிலோ (18 பண்டல்கள்) கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான 4 பேரையும் சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணைக்காக  அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com