ஜூன் 16இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 14th June 2019 08:54 AM | Last Updated : 14th June 2019 08:54 AM | அ+அ அ- |

இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஈரோட்டில் வரும் 16 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 16ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் சி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத் தலைவர் பி.தனபாலன் பேசியதாவது:
ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலை, செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) காலை 8.30 மணி முதல் பகல் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் படித்த, படிக்காத, அனுபவம் உள்ள ஆண், பெண்கள் பங்கேற்கலாம். நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணி விவரங்களை வழங்கி உள்ளனர். இதன்படி 2,000 நபர்களுக்கு மேல் தேவை என பட்டியலிட்டுள்ளனர்.
ஓட்டுநர், தையலர், விற்பனையாளர், கண்காணிப்பாளர், நிறுவன மேலாளர், கணினி இயக்குபவர், அலுவலகப் பணி, எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த சேவை முற்றிலும் இலவசமானது. இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவோர் விவரங்களை கண்காணித்து, வேலைவாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் வேலை வழங்கியவர்களுக்கு பாலமாக செயல்பட திட்டமிட்டுள்ளோம் என்றார். முன்னதாக ராஜேஷ் வரவேற்றார். இதில் வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெப்ரி, விமல், சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.