நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிக்கு அனுப்ப கோரிக்கை

நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிக்கு பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிக்கு பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில்  தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.ராம கவுண்டர் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் வேலுமணி முன்னிலை வகித்தார். 
 இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 
சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகைப் பூக்கள் அதிக அளவில் விளைச்சல் உள்ளது.  தற்போது பூப்பறிக்க பெண் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. கிராமப் புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கு பெண்கள் சென்றுவிடுவதால் இப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்தியமங்கலம் வனப் பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகளால் ஏற்படும் பயிர்சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வனப் பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியேறாமல் தடுக்க அகழிகளைப் பராமரிக்கவேண்டும்.
 கிருஷ்ணகிரியில் ஜூலை 5இல் நடைபெற உள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் உழவர் தின பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்திலிருந்து திரளான விவசாயிகள் கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 இக்கூட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராசா, மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com