மாநகர சாலைகளை சீரமைக்க நூதன முறையில் கோரிக்கை

ஈரோடு மாநகரப் பகுதியில் பெரும்பாலான சாலைகள் பள்ளம் தோண்டிப்போட்டுள்ளதால் புழுதி பறக்கிறது.

ஈரோடு மாநகரப் பகுதியில் பெரும்பாலான சாலைகள் பள்ளம் தோண்டிப்போட்டுள்ளதால் புழுதி பறக்கிறது. இதனால் சுவாசிக்க முடியவில்லை எனக் கூறி முகமூடி அணிந்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை முகமூடி அணிந்து வந்தனர். இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தனர்.  
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 
ஈரோடு மாநகரப் பகுதியில் புதை  சாக்கடை திட்டப்பணி, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணி, புதைவட மின் கம்பி பதிக்கும் பணி உட்பட பல்வேறு பணிக்காக சாலைகளில் குழி தோண்டுகின்றனர். அவற்றை முறையாக மூடாமல் விட்டுச் செல்கின்றனர். அனைத்து இடங்களிலும் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து சாலைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
மகன்கள் பராமரிக்கவில்லை என மூதாட்டி புகார்: இதுகுறித்து அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தை சேர்ந்த செல்லப்ப கவுண்டர் மனைவி உத்தாயி அம்மாள்(87) அளித்த மனு விவரம்:
 எனது  கணவர் 4  ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு 3 மகன்கள் உள்ளனர்.  எனது கணவர் இறந்தபின் எனக்குள்ள சொத்துகளை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தேன். எனது மகன்கள் மூவரும் என்னை முறையாக கவனிக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு அதிகமாக சொத்தை எழுதி வைத்தேன். எண்ணமங்கலத்தில் உள்ள எனது கணவருக்கு சொந்தமான வீட்டில் வசித்தேன். எனது இரண்டு மகன்கள் சேர்ந்து அந்த வீட்டில் இருந்து விரட்டிவிட்டனர். தற்போது அந்தியூர் அருகே சங்கராபாளையத்தில் உள்ள எனது தம்பி வீட்டில் வசிக்கிறேன். எனவே இது குறித்து நடவடிக்கை எடுப்பதுடன் எனது மகன்களிடம் இருந்து எனக்கு பராமரிப்பு தொகை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சி.கதிரவன்,  இதுகுறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதாவிடம் அறிவுறுத்தினார். 
எல்பிபி பிரதான கால்வாயை முழுமையாக தூர்வார கோரிக்கை: இதுகுறித்து ஆட்சியர் சி.கதிரவனிடம்,  கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை 6ஆவது பிரதான கால்வாய் கமிட்டி தலைவர் தங்கராஜ் தலைமையில், விவசாயிகள் அளித்த மனு விவரம்: 
கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிரதான கால்வாய் 74ஆவது மைலில் இருந்து, 84ஆவது மைல் வரை 7 பாசன சபைகளும் சேர்ந்து, மாவட்ட நிர்வாகம், பொதுப் பணித் துறை வழிகாட்டுதலுடன் தூர்வாரி உள்ளோம். 
 இதனால் 10 மைல் தூரம் தண்ணீர் விரைவாகவும் தேக்கமின்றி செல்கிறது. ஆனால், பிரதானக் கால்வாய் 84ஆவது மைலில் இருந்து 125ஆவது மைல் வரை இரு புறமும் செடி, கொடிகள், மரக்கிளைகள் படர்ந்துள்ளன. மேலும் கால்வாயின் நடுவில் ஏராளமான வண்டல் மண் தேங்கி உள்ளது. மேடு, பள்ளங்கள், குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடைக்கோடியான 125ஆவது மைல் வரை பாசனத்துக்குத் தண்ணீர் சரியாக செல்லவில்லை. எனவே, பிரதான கால்வாயை முழுவதுமாக தூர்வாரி செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மாற்று இடத்தில் பட்டா வழங்க கோரிக்கை: சிவகிரி அருகே சின்னியம்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். 
 இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 
வாய்க்கால்மேடு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறோம். இங்குள்ளவர்களுக்கு 2018 மே 11 ஆம் தேதி அரசு சார்பில் சிலுவம்பாளையத்தில் பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலம் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. குண்டும், குழியுமாக உள்ளது.  அந்த இடத்தில் வசிக்க முடியாத நிலையில் அரசின் புறம்போக்கு நிலத்தில் வசிக்கிறோம். எங்களுக்கு பாதுகாப்பான, வீடு கட்டிக்கொள்ளும் அளவுக்கு வசதி உள்ள இடத்தில் பட்டா வழங்க வேண்டும்.
 எங்களுக்கு நிலம் ஒதுக்கி, பட்டா வழங்கும் வரை தற்போது வசிக்கும் புறம்போக்கு நிலத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும். தவிர தற்போது வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் நில உரிமையாளர்கள், எங்களது வீடுகளில் உள்ள கழிவு நீர் வெளியே தங்கள் நிலத்துக்குள் வரக்கூடாது என்றும், இங்கு வசிக்க கூடாது என்றும் மிரட்டுகின்றனர். இதனால் எங்களுக்கு உரிய இடத்தில் பட்டா வழங்கி, பாதுகாப்பாக குடியேறும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com