மாநகரில் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டிய சாலைகள் விவரம்: காவல் துறை அறிவிப்பு
By DIN | Published On : 18th June 2019 07:01 AM | Last Updated : 18th June 2019 07:01 AM | அ+அ அ- |

ஈரோடு மாநகரில் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டிய சாலைகள் விவரத்தை காவல் துறை அறிவித்துள்ளது. இங்கு தலைக் கவசம் அணியாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு வரையிலும், அரசு மருத்துவமனை சாலை சந்திப்பில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா வரையிலும், அரசு மருத்துவமனை சாலை சந்திப்பில் இருந்து ஸ்வஸ்திக் கார்னர் வரையிலும் கட்டாயம் தலைக்கவசம் அணியும் சாலை பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதுபோல் நகரின் மேலும் சில முக்கிய சாலைகள், பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் பகுதிகளிலும் அமல்படுத்தப்படவுள்ளது.
அறிவிக்கப்பட்ட சாலை பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர், பின்னால் அமர்ந்திருப்பவர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிப்பதுடன், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும், வாகனத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்படும் காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.