Enable Javscript for better performance
விளைநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு: நில உரிமையாளர் உள்பட 13 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விளைநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு: நில உரிமையாளர் உள்பட 13 பேர் கைது

    By DIN  |   Published on : 21st June 2019 09:51 AM  |   அ+அ அ-   |    |  

    பெருந்துறை அருகே, உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த தோட்ட உரிமையாளர் செல்வராஜ் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். 
    கோவை, ராசிபாளையம் முதல், தருமபுரி, பாலவாடி வரை 400 கிலோவாட் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம், கோவை மன்டல பொது கட்டுமான வட்டத்தில் மொத்தம் 562 கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது சேலம் மண்டலத்தில் 280 கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் 40 கோபுரங்கள் அமைக்கும் பணி மட்டுமே பாக்கி உள்ளது. இந்த  நிலையில் பெருந்துறையை அடுத்த, புத்தூர் புதுப்பாளையம் பகுதியில் பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் உதவியுடன் மின்வாரிய செயற்பொறியாளர் அருளரசு தலைமையில், மின்வாரியப் பணியாளர்கள் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்கு வியாழக்கிழமை வந்திருந்தனர். 
     இந்தப் பகுதியில் ஈரோடு, சம்பத் நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவருக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன. இதன் வழியாக உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்காகத்தான் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது, செல்வராஜ் தோட்டத்தின் நுழைவுக் கதவை பூட்டியிருந்தார்.  இதனால் போலீஸாரும், அதிகாரிகளும் மூன்று மணி நேரமாக காத்திருந்தனர். இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியோடு பூட்டை உடைத்தனர். பின்னர்  பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தோட்டத்தில் இருந்த 37 தென்னை மரங்கள் அகற்றப்பட்டு கோபுரம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோட்ட உரிமையாளர் செல்வராஜ் உள்பட 13 பேரை பெருந்துறை போலீஸார் கைது செய்தனர்.
    இதுகுறித்து விவசாயி செல்வராஜ் கூறியதாவது: 
    இப்பகுதி விளை நிலம் வழியாக மின்கோபுரம் அமைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியிருந்தேன். இந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம், எனக்கு சேர வேண்டிய தொகையை முறையாக வழங்கிவிட்டு பின்னர் இந்த நிலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கலாம் என்றும், அத்தொகை போதவில்லை எனில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இதுவரை அதிகாரிகள் முறையாக எனக்கு பணம் ஏதும் வழங்கவில்லை. நான் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளேன். அதனால் என் தோட்டத்தை பூட்டியுள்ளேன். இந்நிலையில் பூட்டை உடைத்துள்ளனர்.  இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன் என்றார்.
    இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
    37 தென்னை மரங்களுக்கு இழப்பீடாக ரூ. 10 லட்சத்து 16,380 மற்றும் 128 ச.மீ பரப்பளவு உள்ள இடத்துக்கு, ரூ. 41 ஆயிரத்து 434 காசோலையாக ஒப்படைத்தோம். அதனை செல்வராஜ் ஏற்க மறுத்து விட்டார். எங்களுக்கு இந்த இடத்தில் நுழைந்து பணி செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு கொடுத்துள்ளார். எனவே, போலீஸார் உதவியோடு பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்றனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp