சுடச்சுட

  

  மல்லிகைப்பூ கிலோ ரூ.40 ஆக விலை வீழ்ச்சி: பூக்களைப் பறிக்காமல் தோட்டங்களில் விடும் விவசாயிகள்

  By DIN  |   Published on : 26th June 2019 07:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை, முல்லை பூக்களின் விலை சரிவால் தோட்டங்களில் சாகுபடி செய்த பூக்களை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை பறிக்கவில்லை. கிலோ ரூ.500 வரை விற்கப்பட்ட பூக்கள், கிலோ ரூ.40 ஆக சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
  சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர், தொட்டம்பாளையம், பகுத்தம்பாளையம், தயிர்ப்பள்ளம், புதுவடவள்ளி, புதுப்பீர்கடவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லி, முல்லை சாகுபடி செய்துள்ளனர்.
  தற்போது வெயில் கால நிலையால் பூக்களின் வரத்து அதிகமானதால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
  கடந்த மாதம் மல்லிகைப்பூ கிலோ ரூ.500 வரை விற்கப்பட்டது. தற்போது, கிலோ ரூ.40 ஆக சரிந்துள்ளது. 
  தற்போது, திருமண நிகழ்ச்சிகள், பண்டிகை மற்றும் கோயில் விழா கொண்டாட்டம் இல்லாத சூழலில் பூக்களின் வரத்து அதிகபட்சமாக 12 டன்னாக இருந்தன. சத்தியமங்கலம் மலர்கள் விற்பனை நிலையத்தில் ஏலத்துக்கு கொண்டவரப்பட்ட பூக்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், பூக்களின்  விலை சரிந்தது. விவசாயிகள் கொண்டு வந்த பூக்களை திருப்பி எடுத்துச் செல்லமால்  அதனை குறைந்த விலையான கிலோ ரூ.40க்கு வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைக்கு செவ்வாய்க்கிழமை விற்றனர். தோட்டங்களில் சாகுபடி செய்த மல்லி, முல்லை பூக்களை பறிக்க கூலி  கிலோ ரூ.20 வரையிலும்  உரம், உற்பத்தி செலவு என கூடுதல் செலவாகிறது.
  தற்போது கிலோ ரூ.40  ஏலம் போவதால் கட்டுபடியாகாத விலையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், பூப் பறிக்க செலவிடும் கூலி அதிகமாக இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் பூக்களை பறிக்காமல் தோட்டங்களிலேயே விட்டனர். பூ விவசாயிகளை காப்பாற்ற அரசு சார்பில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai