அந்தியூரில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூர் பேரூராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தியும்

அந்தியூர் பேரூராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தியும் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பேரூராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தியூர் ஒன்றிய திமுக செயலர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.  மாநில விவசாய அணி துணைச் செயலர் கள்ளிப்பட்டி மணி, மாநில மாணவரணி துணைச் செயலர் பி.ஆர்.எஸ்.ரங்கசாமி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.குருசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் ஷோபியா ஷேக் முன்னிலை வகித்தனர்.  
அந்தியூரில் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 28 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பவானி மற்றும் காவிரி ஆறுகளில் நீரேற்றப்படும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, முறையாக சுத்திகரிக்கப்படாமல் தண்ணீர் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
நாள்தோறும் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், தற்போது 2 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. 
குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் ஆறு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்.  இப்பிரச்னையைத் தீர்க்க பலமுறை மனு அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  
இதனைக் கண்டித்தும், தண்ணீரை சுத்திகரித்து வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் செபஸ்தியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com