அரசு மருத்துவமனைக்கு ரத்த சுத்திகரிப்புக் கருவி: ஒளிரும் ஈரோடு அமைப்பு வழங்கியது
By DIN | Published On : 28th June 2019 06:25 AM | Last Updated : 28th June 2019 06:25 AM | அ+அ அ- |

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ. 17.44 லட்சம் மதிப்பில் ரத்த சுத்திகரிப்பு கருவிகளை ஒளிரும் ஈரோடு அமைப்பு வழங்கியது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு விரிவுபடுத்தப்பட்டு ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் 10 கருவிகளும், ஒரு எண்டோஸ்கோபி கருவியும் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவமனையில் சிறு பூங்காக்கள், தரைத் தளங்கள் அமைத்து கொடுக்கப்பட்டன. அவசர சிகிச்சை பிரிவில் சுமார் ரூ. 40 லட்சம் செலவில் கட்டடம் புனரமைக்கப்பட்டு நவீன கருவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த சுத்திகரிப்புப் பிரிவில் கூடுதலாக 2 கருவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இதில் செளத் இந்தியன் வங்கி, ஒளிரும் ஈரோடு அமைப்பு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆகியவற்றின் நிதி உதவியுடன் 2 ரத்த சுத்திகரிப்பு கருவிகள், ஒரு மறுசுழற்சி இயந்திரம், 2 படுக்கைகள் என மொத்தம் ரூ. 17.44 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னுசாமி தலைமை வகித்தார். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ராதாமணி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பங்கேற்று புதிய கருவிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். இதில் ஒளிரும் ஈரோடு அமைப்பின் செயலாளர் கணேசன், சுகாதாரக் குழு தலைவர் டாக்டர் அபுல்ஹாசன், அறங்காவலர்கள் எஸ்.கே.எம்.சிவ்குமார், எம்.சி.ஆர்.ராபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.