அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்
By DIN | Published On : 04th March 2019 07:17 AM | Last Updated : 04th March 2019 07:17 AM | அ+அ அ- |

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை குறித்த காலத்தில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கொமதேக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களின் 70 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது. இத்திட்டத்துக்கு 2011ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதைக் கண்டித்து மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், சட்டப் பேரவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு ஆரம்பக்கட்ட கள ஆய்வுக்கு ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கி ஜெயலலிதா அரசாணை வெளியிட்டு மீண்டும் திட்டம் நிறைவேற்றப்படுவது போல நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
2016ஆம் ஆண்டு தேர்தலிலும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை கொங்குமண்டல மக்களிடத்தில் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கான தமிழக அரசின் விரிவான அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்றும், நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்ததற்கான காரணங்களாக கூறப்பட்டது. மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும் தமிழக அரசால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்து பல ஆண்டுகள் கடந்தும் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
எனவே, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மக்களவைத் தேர்தலுக்காக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதாக இல்லாமல் இத்திட்டத்தை குறித்த காலத்தில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.