சுடச்சுட

  

  மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம்  வாக்களிக்க ஏற்பாடு: ஆட்சியர்

  By DIN  |   Published on : 17th March 2019 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார். 
  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கு, தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது: 
  மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவை தொகுதிகளையும் கண்காணிக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தைச் சார்ந்த 3 பேர்  மற்றும் தொகுதி வாரியாக கண்காணிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த சிறப்பு ஆசிரியர்கள் தொகுதிக்கு 4 பேர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பாசிரியர்கள் வீடுவீடாகச் சென்று அப்பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவர்கள் எவ்வகையான மாற்றுத்திறனாளிகள் என்பதை அருகிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவிக்கவேண்டும். 
  மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி மற்றும் துண்டறிக்கைகள் வழங்கப்படவுள்ளன. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு துணையாக ஒருவர் வாக்குப் பதிவு மையத்துக்கு வரலாம்.  மேலும் அவர்கள் வாக்களிக்க வசதியாக பிரெய்லி வகை பூத் சிலிப் வழங்கப்படவுள்ளன. தேர்தல் நாளில் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வர வாகன வசதியும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  மாவட்டத்தில் மொத்தம் 34,653 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் சிறப்பாசிரியர்கள் பாலமாக இருந்து மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் 100 சதவீதம் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றார். 
  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.குமார், தேர்தல் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai