ஈரோட்டில் 3ஆவது முறையாக களமிறங்கும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி

விவசாயிகளின் நண்பர் என அழைக்கப்படும் கணேசமூர்த்தி, மறுசீரமைக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் 3ஆவது முறையாக மதிமுக சார்பில் களமிறங்குகிறார். 


விவசாயிகளின் நண்பர் என அழைக்கப்படும் கணேசமூர்த்தி, மறுசீரமைக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் 3ஆவது முறையாக மதிமுக சார்பில் களமிறங்குகிறார். 
கைத்தறி, விசைத்தறி, ஜவுளிப் பொருள்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் செய்யும் நெசவாளர்கள் அதிகம் இருக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதி 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது உருவானது.
திருசெங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, புதிய மக்களவைத் தொகுதியாக ஈரோடு உருவாக்கப்பட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதியில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதிகள், திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிகள், நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவை அடங்கியுள்ளன. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட அ.கணேசமூர்த்தி 2,84,148 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் 2,34,812 வாக்குகளைப் பெற்று 49 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16ஆவது மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் பேட்டியிட்ட கணேசமூர்த்தியை 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.செல்வக்குமார சின்னையன் தோற்கடித்தார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி உருவான பிறகு நடைபெறும் 3 ஆவது தேர்தல் இது. ஏற்கெனவே இரண்டு முறை போட்டியிட்டு ஒரு முறை வெற்றிபெற்றுள்ள கணேசமூர்த்தி தற்போது 3ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். இவர் பொதுவாக எந்தப் பிரச்னையிலும் சிக்காதவர். அமைதியானவர் என பெயரெடுத்தவர். விவசாயிகள் பிரச்னை என்றால் முன்னால் நிற்பார் என்ற பெயரை எடுத்துள்ளார். விளை நிலங்கள் வழியாக கெயில் எரிவாயுக் குழாய் அமைக்கும் பிரச்னை, அட்டப்பாடி அணை பிரச்னை, முல்லைப்பெரியாறு அணை பிரச்னை போன்றவற்றில் விவசாயிகளுடன் நின்று போராடியவர் என்பதால் விவசாயிகளின் நண்பர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. 
இப்போது ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கும் இவர் ஆதரவு தெரிவித்து வருகிறார்.  
ஈரோடு - பழனி ரயில் பாதை அமைய கணேசமூர்த்தி தடையாக இருந்தார் என இந்த ரயில் பாதை அமைய வேண்டும் என முயற்சி செய்பவர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.  ஆனால், உத்தேசிக்கப்பட்ட வழித்தடத்தில் இந்த ரயில் பாதை அமையுமானால் விளை நிலங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்பதால் குறிப்பிட்ட வழியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என விவசாயிகளின் கருத்தைத்தான் கணேசமூர்த்தி பிரதிபலித்தார் என்கின்றனர் விவசாயிகள். 
இதுபோன்ற சில சாதகமான சூழலை அவர் உருவாக்கி வைத்துள்ளதால்தான் பெரிய அளவில் கூட்டணி இல்லாதபோதும் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் திமுக வேட்பாளரை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
 அவர் எம்.பி.யாக இருந்த காலத்தில் தொகுதியில் பெரிய அளவில் குறிப்பிடும்படியாக திட்டங்களை ஏதும் கொண்டுவரவில்லை என்றாலும், மக்களிடம் வெறுப்பை சம்பாதிக்கவில்லை என்று கூறலாம். விவசாயிகள் மத்தியில் இவருக்கு உள்ள நல்ல பெயர், பிற பிரிவுகளில் உள்ள மக்களிடம் பெயரை கெடுத்துக்கொள்ளாதது போன்றவை இவருக்கு இந்த தேர்தலில் நம்பிக்கையூட்டும் அம்சங்களாக நடுநிலையாளர்களால் பார்க்கப்படுகிறது. 
வேட்பாளர் அறிமுகம்: ஈரோடு மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு கிராமத்தைச் சேர்ந்த இவர், அவினாசி கவுண்டர்-சாரதாம்பாள் தம்பதியின் மகனாக கடந்த 10-6-1947 இல் பிறந்தார். சென்னை தியாகராயர் கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்துள்ளார். இவரது மனைவி பாலாமணி இறந்துவிட்டார். மகள் தமிழ்பிரியா, மகன் கபிலன் ஆகியோர் உள்ளனர். கல்லூரி காலத்திலேயே திமுகவில் சேர்ந்த இவருக்கு 1978 ஆம் ஆண்டில் மாநில மாணவரணி இணை அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1984 இல் ஈரோடு மாவட்ட திமுக செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். 
1989 இல் திமுக சார்பில் மொடக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1998 இல் அதிமுக கூட்டணியில் மதிமுக சார்பில் பழனி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார். இதன்பிறகு 2009 இல் அதிமுக கூட்டணியில் மதிமுக சார்பில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தொகுதி மறுசீரமைப்பில் உருவான ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினரானார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com